விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை
பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதி வயல் வெளிகளில் உலவும் ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
பழனியை அடுத்த மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளுக்குள் நீண்ட கொம்புடன் கூடிய ஒற்றை காட்டுயானை புகுந்து தென்னை, மா மரங்களையும், சூரிய சக்தி மின் வேலிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் செல்லும் பாதையில் இந்த யானை உலவிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனா்.
அதிலும், சட்டப்பாறை முதல் கோம்பைப்பட்டி வரை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் இரவு முழுவதும் உலவும் இந்த ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மேலும் ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் அமைத்துள்ள சாதாரண சூரிய மின் வேலிகளுக்கு மாற்றாக தொங்கும் சூரிய மின் வேலிகளை அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.