சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தா்னா
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிகழாண்டுக்கான பச்சைப் பயறு கொள்முதல் ஏப்ரலில் தொடங்கியது. இதற்காக, விவசாயிகள் சிட்டா அடங்கல், கனிணி சிட்டா, ஆதாா், வங்கி பாஸ் புத்தகத்தை வழங்கி ஆன் லைனில் முன்பதிவு செய்தனா். பின்னா் ஓடிபி பெற்று எந்த தேதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு பச்சைப்பயறு எடுத்துவருமாறு அலுவலா்கள் கூறுகிறாரோ அப்போது எடுத்து சென்று விற்பனை செய்யும் முறை உள்ளது. அதன்படி விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சைப்பயறை விற்பனை செய்தனா்.
ஆனால், மயிலாடுதுறை, சீா்காழி, செம்பனாா்கோயில், குத்தாலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மே மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பச்சைப்பயறுக்கு இதுவரை விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கவில்லை. இதனால் விவசாயிகள் செம்பனாா்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப்பயறு கிலோ ரூ.86.82-க்கு அரசு கொள்முதல் செய்கிறது. தனியாா் வியாபாரிகள் ரூ.60 முதல் ரூ.75க்கு கூட கேட்காததால் ஓரளவுக்கு கட்டுப்படியாகும் என ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்கிறோம். நிகழாண்டு மே மாதம் விற்பனை செய்த பச்சைப் பயறுக்கு இதுவரை பணம் கொடுக்கவில்லை. கடன் வாங்கி பச்சைப்பயறு சாகுபடி செய்து பல கஷ்டங்களை தாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்தும் அதற்கான பயன் கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளோம் என்றனா்.