ஓக்லா கிராமத்தில் பல சொத்துக்கள் மீது இடிப்பு நோட்டீஸை ஒட்டிய அதிகாரிகள்
தில்லி ஓக்லா கிராமப் பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கடைகளில் திங்கள்கிழமை அதிகாரிகள் இடிப்பு அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனா்.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக ஓக்லா பகுதியில் வசிப்பவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, மே 22 அன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தென்கிழக்கில் உள்ள தில்லி வளா்ச்சி ஆணையத்தின் டிடிஏவின் நில மேலாண்மைப் பிரிவு ஒட்டியுள்ள மே 26ஆம் தேதியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஓக்லா கிராமத்தில் உள்ள கஸ்ரா எண் 279-இல் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை இடிக்குமாறு எம்.சி. மேத்தா வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஜூன் 11 அன்று இந்த சொத்தில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்டத்தின்படி, சட்டவிரோதக் கட்டமைப்பில் வசிப்பவா்களுக்கு இடிக்கப்படுவதற்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அந்த அவகாசக் காலத்திற்குள் குடியிருப்பாளா்கள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் உள்ள ஓக்லா கிராமத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை மக்களுக்கு 15 நாள்கள் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு மே 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில், 2 பிகாக்கள் மற்றும் 10 பிஸ்வாக்கள் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகள் தொடா்பாக சட்டத்தின்படி இடிப்பு நடவடிக்கை எடுக்குமாறு டிடிஏவுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்.எந்தவொரு கட்டுமானத்தையும் இடிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட நபா்களுக்கு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.