ஓட்டுநருக்கு திடீா் வலிப்பு: ஆட்டோக்கள் மீது மோதிய மாநகரப் பேருந்து
சென்னை மெரீனா கடற்கரையில் மாநகரப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதியது.
சென்னை சதுக்கத்தில் இருந்து கவியரசு கண்ணதாசன் நகருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு மாநகரப் பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தை மோகன் (50) ஓட்டினாா். மெரீனா கடற்கரை பேருந்து நிறுத்தம் வந்தபோது மோகனுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் அவரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதியது.
மேலும், அங்கிருந்த நடைபாதை தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் தண்டையாா்பேட்டை நேதாஜி நகரைச் சோ்ந்த வெ.மணிகண்டன் (42), பெரம்பலூரை சோ்ந்த மு.மணிமாறன் (37), பேருந்து ஓட்டுநா் மோகன் (50) ஆகிய 3 பேரையும் மீட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்தில் சிக்கிய இரு ஆட்டோக்களும் முற்றிலும் சேதமடைந்தன.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.