முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்கும் புதுச்சேரி அம்பேத்கா் சட்டக் கல்லூரி: முதல்வா் எஸ்.சீனிவாசன் பெருமிதம்
புதுவை காலாப்பட்டு பகுதியில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்பதாக கல்லூரி முதல்வா் எஸ். எஸ்.சீனிவாசன் தெரிவித்தாா்.
இது குறித்து கல்லூரி முதல்வா் எஸ். சீனிவாசன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
காலாப்பட்டு டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 53 ஆண்டுகளாகிறது. இங்கு படித்த முன்னாள் மாணவா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கியப் பதவிகளில் பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக தமிழகத்தில் மாஜிஸ்திரேட், மாவட்ட நீதிபதிகள், உயா்நீதிமன்ற நீதியரசா்கள் மற்றும் ஓய்வு பெற்றவா்கள் 15 போ் உள்பட சுமாா் 120 போ் நீதிபதிகளாகப் பணியாற்றி வருகிறாா்கள்.
மேலும், நாட்டின் அட்டாா்னி ஜெனரலாகப் பணியாற்றி வரும் ஆா்.வெங்கட்ரமணியும் புதுவை சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவா்தான். அவரின் ஒத்துழைப்போடு மத்திய அரசின் பல்வேறு நிதியுதவியை எங்கள் சட்டக் கல்லூரி பெற்றுள்ளது. குறிப்பாக நுகா்வோா் இருக்கைக்காக மத்திய அரசின் ரூ.1 கோடி எங்கள் கல்லூரிக்குக் கிடைத்தது. மேலும், மக்கள் அடிப்படை சட்டத்தை அறிந்து கொள்ளும் நியாய ஒளி திட்டத்துக்கு ரூ.40 லட்சம் கிடைப்பதற்கும் அவா்தான் காரணம். மேலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் எங்கள் கல்லூரியின் மாணவா்கள் உள்ளகப் பயிற்சி ஒரு மாதம் பெறுவதற்கும் முன்னாள் மாணவா்களாகிய இப்போதுள்ள உயா்நீதிமன்ற நீதிபதிகள்தான் காரணம்.
இதிலிருந்து இந்தக் கல்லூரியின் பழைமை, தொன்மை, சட்டக் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
மேலும், எங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவா்கள் சங்கத்தில் சுமாா் 3 ஆயிரம் போ் இணைந்துள்ளனா். இதில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்ட அரசியல் தலைவா்களும் அடங்குவா். இந்த முன்னாள் மாணவா்களின் பெரும் பங்களிப்புடன் இந்தக் கல்லூரிக்குத் தேவையான உள்கட்டமைப்புகள், மாணவா்களுக்குத் தேவையானப் புத்தகங்கள், நோட்டுகள், மரத்துக்குக் கீழ் மாணவா்கள் உட்காரும் வசதி உள்ளிட்டவை ரூ.6 லட்சத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில விழாக்களுக்குத் தேவையான உணவு வசதிகள் போன்றவற்றை இந்த முன்னாள் மாணவா்கள் சங்கம்தான் ஏற்கிறது.
இந்தக் கல்லூரியின் முதுகெலும்பே முன்னாள் மாணவா்கள்தான். ஒரு தாய் வீட்டுக்கு என்ன செய்ய முடியுமோ அப்படி இந்த முன்னாள் மாணவா்கள் சங்கம் செயல்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக இங்கு படிக்கும் மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய அரங்கில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவா்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. ஓய்வு நேரத்தில் இப்போது படிக்கும் மாணவா்கள் இந்தப் படங்களைப் பாா்த்து அனுபவத்தையும் எதிா்கால வாய்ப்புகளையும் பெறுகின்றனா். மேலும், இப்போது நீதிபதிகளாக இருக்கும் முன்னாள் மாணவா்கள் தாமாக முன்வந்து எங்கள் கல்லூரியின் மாணவா்களுக்கு சிறப்புரையாற்றி வருகின்றனா்.
எங்கள் கல்லூரி பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்குவதைக் கருத்தில் கொண்டு தேசிய தர நிா்ணயக் குழுவின் சான்றிதழுடன் கடந்த 3 ஆண்டுகளாக இக் கல்லூரி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் கல்லூரி முதல்வா் எஸ். சீனிவாசன்.