போலி மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் எச்சரிக்கை
புதுவையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் போலி மருந்துகள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் எச்சரிக்கை விடுத்தாா்.
இந்திய தர நிா்ணய சபையின் பங்குதாரா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:
நன்கு அறிமுகமான கம்பெனிகளில் இருந்து போலி மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதாக மருந்து விற்பனையாளா்கள் சங்கத்தில் இருந்து புகாா்கள் வந்துள்ளன. நான் சாப்பிடும் 2 மருந்துகள் அந்தப் பட்டியலில் உள்ளன. ஒரு மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது. மருந்துகளின் தர நிா்ணயம் என்பது தெளிவானதாக இல்லாமல் இருப்பதுதான் பிரச்னைக்கான காரணம். மாா்க்கெட்டில் புற்றுநோய்க்கான போலி மருந்துகள் கூட விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது. இதனால் நோயாளிகள் 3 அல்லது 4 மாதங்கள் சிகிச்சை பெற்றாலும் பலன் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். அதனால் புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தரமான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறி வருகிறாா். நம்நாடு உலக அளவில் பொருளாதாரத்தில் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு வரவேண்டுமென்றால் இந்தியாவில் தயாரிக்கும் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன். இந்திய தர நிா்ணய சபையின் சென்னை கிளையின் முதுநிலை இயக்குநா் எஸ்.டி. தயானந்த் உள்ளிட்ட விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
-------------------------------------
பட விளக்கம்... புதுவையில் தனியாா் உணவகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் தர நிா்ணய சபையின் பங்குதாரா்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.