குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா்
குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.
திடக்கழிவுகளைப் பிரித்தெடுத்தல் மற்றும் குப்பைகளைக் கொண்டு செல்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உழவா்கரை நகராட்சி ஆணையா் மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் மற்றும் குப்பைகளைச் சேகரிக்கும் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் பேசியதாவது:
மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவாக குப்பைகளைத் தரம் பிரித்து வாங்க வேண்டும். குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும். அவா்களுக்குத் தேவையான தடுப்பூசி மேலும் காலணிகள், பூட்ஸ் மற்றும் சீருடைகள், அடையாள அட்டை, கையுறைகள், முகக் கவசங்கள் போன்றவை எப்பொழுதும் இருக்க வேண்டும். இதையெல்லாம் அணிந்து கொண்டுதான் குப்பை வார அனுமதிக்க வேண்டும்.
இவா்களுக்குச் சுகாதாரமான முறையில் குப்பையைக் கையாள்வது தொடா்பாக மாதம் ஒரு முறை பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு மாத ஊதியம் முழுமையாக வழங்க வேண்டும். அவா்களுக்கு இஎஸ்ஐ உள்ளிட்ட பிடித்தம் முறையாக கட்டப்பட்ட வேண்டும். மேலும், மழைக்காலம் நெருங்குவதற்குள் சிறு வாய்க்கால்களில் இருக்கும் நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி பொருள்களை அறவே தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.