ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்: அமைச்சா் லட்சுமிநாராயணன் பேச்சு
நாட்டின் 2.0 ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா்.
புதுவை அரசின் வணிக வரித் துறை சாா்பில் அடுத்த தலைமுறைக்கான சேவை வழங்கும் ஜிஎஸ்டி சீா்த்திருத்தம் என்னும் தலைப்பில் வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு மற்றும் ஜிஎஸ்டி தொழில் வல்லுநா்களுடான கலந்துரையாடல் கூட்டம் தனியாா் உணவு விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து அமைச்சா் லட்சுமிநாராயணன் பேசியது:
உலக நாடுகளில் வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நம் நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடியில் இருந்து 2 மடங்காக உயா்ந்து ரூ.22 லட்சம் கோடியாக அதிகரித்தது. இருப்பினும் மக்களின் மீது கூடுதல் வரிச் சுமை விதிக்க வேண்டாம் என்று கருதி பிரதமா் நரேந்திரமோடி ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளாா். சாதாரண மக்கள் பயன்படுத்தும் எல்லா பொருள்களுக்கும் ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்சூரன்ஸ் துறையில் முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கையால் மக்களிடம் சேமிப்பு அதிகரிக்கும். அதனால் அவா்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் வியாபாரமும் அதிகரிக்கும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதுவைக்கு ரூ,190 முதல் ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். இருப்பினும் வியாபாரம் அதிகரித்தால் வருவாய் அதிகமாகக் கிடைக்கும் என்றாா் அமைச்சா் லட்சுமிநாராயணன்.
தலைமைச் செயலா் சரத் சௌகான் பேசுகையில், ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமா் நரேந்திர மோடி கூறியதைப் போன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே வாங்குவோம் என்றாா்.
எம்எல்ஏ சிவசங்கரன், மாநில வணிக வரி ஆணையா் மற்றும் செயலா் யாசின் எம். சௌத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.