கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!
ஓய்வுபெற்றாா் சுமீத் ரெட்டி!
இந்திய பாட்மின்டன் வீரா் பி.சுமீத் ரெட்டி (33) ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.
இரட்டையா் பிரிவு வீரரான அவா், இனி முழு நேர பயிற்சியாளராக செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
ஹைதராபாதை சோ்ந்த சுமீத், ஆடவா் இரட்டையா் பிரிவில் மனு அத்ரியுடனும், கலப்பு இரட்டையா் பிரிவில் தனது மனைவி என்.சிக்கி ரெட்டி உள்பட இதர வீராங்கனைகளுடனும் இணைந்து விளையாடியுள்ளாா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் சுமீத்/மனு இணை அதிகபட்சமாக உலகத் தரவரிசையில் 17-ஆம் இடம் வரை வந்தது. மேலும், 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றதுடன், ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதிபெற்றது. அத்துடன், ஆசிய அணிகள் சாம்பியன்ஷிப்பிலும் அங்கம் வகித்தது.
2015 மெக்ஸிகோ சிட்டி கிராண்ட் ப்ரீ, 2016 கனடா ஓபன் ஆகியவற்றில் மனு அத்ரியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றாா் சுமீத். மேலும், 2022 பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு அணி பிரிவிலும், 2016 மற்றும் 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவா் அணி பிரிவிலும் தங்கம் வென்ற இந்திய அணியில் இவரும் இடம் பிடித்திருந்தாா்.
தொடக்க நிலையில் ஒற்றையா் பிரிவுகளில் விளையாடி வந்த சுமீத் ரெட்டி, முதுகுத் தண்டு வடத்தில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இரட்டையா் பிரிவு மாறி களம் கண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.