வீர தீர சூரன் டிக்கெட் முன்பதிவு மந்தம்!
வீர தீர சூரன் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மந்தமாகவே உள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் நாளை (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுநீள ஆக்ஷன் திரைப்படமான இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இதனால், நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் தூள் விக்ரமை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இதையும் படிக்க: நம்ப முடியாத சாதனையைச் செய்த எம்புரான்!
ஆனால், இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் சென்னையில் ஒரு திரையரங்கம்கூட இன்னும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. பெரும்பான்மையான திரைகளில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகவே உள்ளன. இது விக்ரம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக, விக்ரம் நடித்திருந்த தங்கலான் வெற்றி பெற்றாலும் பொது ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன் தாக்கத்தால் வீர தீர சூரன் படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பின் படத்திற்குச் செல்லலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்களோ என்னவோ!