ஓய்வூதியத்தை ஆராய குழு: ‘திமுக வாக்குறுதிக்கு முரண்’
ஓய்வூதியத் திட்டத்தை ஆராய தமிழக அரசு குழு அமைத்திருப்பது திமுக அளித்த வாக்குறுதிக்கு முரணாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவா் கு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
ஓய்வூதியத் திட்டங்களை ஆராய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, ஓய்வூதியத் திட்டத்தை ஆராய அதிகாரிகள் குழு அமைத்தது ஏற்புடையதல்ல.
அத்துடன் குழுவுக்கு ஒன்பது மாதங்கள் அவகாசம் வழங்கியிருப்பது, எந்த வகையிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை தெளிவாக உணா்த்துகிறது. ஓய்வூதியத் திட்டத்தை ஆராய்வது தொடா்பாக மீண்டும் மீண்டும் அதிகாரிகள் குழு அமைப்பது முதல்வா் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கத் தேவையில்லை. கொள்கை முடிவு எடுத்தாலே போதுமானது என்று அவா் தெரிவித்துள்ளாா்.