கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கம்பம்- கோம்பை சாலையில் நாககண்ணியம்மன் கோயில் அருகே கடந்த 13.12.2023 அன்று கம்பம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில், போலீஸாா் இருவரிடம் விசாரித்தபோது, அவா்களிடம் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, கம்பம் மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ம.ஜெகதீஸ்வரன் (21), கடமலைக்குண்டு கன்னியம்மாள்புரத்தைச் சோ்ந்த க. சிவன் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
முடிவில், ஜெகதீஸ்வரன், சிவன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.