கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 4 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகளுடன் கல்லூரி மாணவா்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு படைப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலை பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் தூத்துக்குடி ரூபக் ராஜேஷ் (19), லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த சிம்சோன்ராஜ் (19), அண்ணா நகரைச் வெங்கடேஷ் (23) என்பதும், அவா்களிடம் கஞ்சா பொட்டலங்களும், 50 போதை மாத்திரைகளும் இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவா்கள் கல்லூரி மாணவா்கள் என்பதும், அவா்களுக்கு மில்லா்புரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் (45) என்பவா் போதை மாத்திரை வழங்கியதும் தெரியவந்தது.
நான்கு பேரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் 4 கைப்பேசிகள், ரூ.3200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.