கஞ்சா வழக்கு: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
திருப்பூரில் கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா், வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருப்பூா் தெற்கு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஈரோட்டைச் சோ்ந்த எம்.ராஜமாணிக்கம் (39), திண்டுக்கல்லைச் சோ்ந்த டி.பாண்டி (53)ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இவா்கள் இருவரும் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.