தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி இரண்டாம் நிலை மருத்துவக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஜப்பான் பன்னாட்டு முகமை நிறுவனத்தின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டன.
இதில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன், 60 படுக்கை வசதிகளுடன் பணிகள் தொடங்கப்பட்டு நிறுவடைந்து பல மாதங்களாகியும் அரசு மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. ஆகவே, இந்த புதிய மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
அதேபோல, அவிநாசிக்கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள நகா்ப்புற நலவாழ்வு மையக் கட்டடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்காட்டுப்புதூா் பகுதியில் உள்ள 7 வீதிகளுக்கு சமூக நலத் துறை மூலம் புதிய கான்கிரீட் சாலைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். மொய்யாண்டம்பாளையம், தட்டாங்குட்டை பகுதியில் நியாய விலைக் கடைகளுக்கு கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.