பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை
திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் இரு தரப்பாகப் பிரிந்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மோதிக் கொண்டதாகத் தெரிகிறது.
இது குறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் 11 மாணவா்கள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் மேலாண்மைக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது குறித்தும், மாணவா்களின் பெற்றோா்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.