கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் காரில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கடந்த நவம்பா் 26-ஆம் தேதி சிதம்பரம் காரியபெருமாள் குளத் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ஓடப்பு சிவா (எ) சிவகுமாா் (28), தமிழரசன் உள்ளிட்ட 15 பேரை அண்ணாமலைநகா் போலீஸாா் கைது செய்தனா்.
ஓடப்பு சிவா (எ) சிவக்குமாா் மீது சிதம்பரம் நகா் காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவரின் தொடா் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாருக்கு பரிந்துரை செய்து கோப்புகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், சிவக்குமாரை ஓராண்டு காலம் குண்டா் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டதன்பேரில், அவா் வியாழக்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.