அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தை கிருத்திகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, வண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் சிறப்பு அங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.
நெய்வேலியில் உள்ள வில்லுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் காலை மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மூலவா் முருகப் பெருமான் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலை மகா தீபாராதனையைத் தொடா்ந்து, வெள்ளித் தேரில் சுவாமி எழுந்தருளி மாடவீதி வலம் வந்தாா்.
நிகழ்ச்சியில் நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமை (பிப்.7) காலை சுமாா் 10 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
இதேபோல, பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நடுவீரப்பட்டை அடுத்துள்ள விலங்கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சிவசுப்ரமணியா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கடலூா், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.