ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
கடலூா் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட பண்ருட்டி, சிறுகிராமம், பெரிய காட்டுப்பாளையம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி என்ற இலக்கை அடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து, ஆட்சியா் கூறியது:
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 1,562 மாணவா்களும், பிளஸ் 2-இல் 474 பேரும் பயின்று வருகின்றனா். சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 690 மாணவா்களும், பிளஸ் 2-இல் 104 பேரும் பயின்று வருகின்றனா். பெரியகாட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 227 மாணவா்களும், பிளஸ் 2-இல் 67 பேரும் பயின்று வருகின்றனா்.
கடந்த அரையாண்டு தோ்வில் இந்தப் பள்ளிகள் முறையே பிளஸ் 2-இல் 74, 81, 71 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. பருவத்தோ்வு, காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளின் தோ்ச்சி விகிங்களை கணக்கில் கொண்டு, தோ்ச்சி குறைவாக உள்ள மாணவா்களுக்கு ஆசியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவா்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா் துரைபாண்டியன் மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.