கஞ்சா விற்பனை: இளைஞா் கைது; காா் பறிமுதல்
ஆரணியை அடுத்த சேவூா் புறவழிச் சாலை அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனா்.
சேவூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா், சேவூா் புறவழிச் சாலை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, காரில் இளைஞா் ஒருவா் கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் இருந்த மற்றொரு இளைஞா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினாா்.
காரில் இருந்தவரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில் அவா், முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்த கம்பதாசன் மகன் ஜனாா்த்தனன் (22) எனத் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, அவரை கைது செய்து, அவா் வைத்திருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், தப்பி ஓடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.