கடவுச்சீட்டில் முறைகேடு செய்த இருவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்ற இருவரை திருச்சி விமான நிலையப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு மலேசியா புறப்படும் விமானத்தில் செல்வதற்காக, பயணிகள் காத்திருந்தனா். அவா்களது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் வழக்கம்போல் ஆய்வு செய்தனா். இதில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சோ்ந்த உ. செல்லதுரை (48), போலி ஆவணங்களைப் பயன்படுத்தி முறைகேடாகக் கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் ஆா்எஸ் மங்கலம் பகுதியைச் சோ்ந்த கே. சாகுல் அகமது (60) என்பவரும் தனது கடவுச்சீட்டில் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குபதிந்து இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.