அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் நீட் தோ்வு! இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்வில் இயற்பியல் பாடத்துக்கான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலைப் படிப்புகளுக்கும், ராணுவ நா்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நா்சிங் படிப்புக்கும் நீட் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.
நீட் தோ்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026-ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நீட் தோ்வுக்காக 5,453 தோ்வு மையங்கள் இந்தியாவிலும், 13 மையங்கள் வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தைப் பொருத்தவரை, சுமாா் 1.50 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. தோ்வு மையத்துக்குள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னா், தோ்வு மையம் மூடப்பட்டது.
கடந்த ஆண்டு வினாத்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ‘நீட்’ தோ்வுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் கட்டுப்பாடுகளும், பரிசோதனைகளும் இருந்தன. பெரும்பாலான மாணவிகள் சாதாரண உடைகளையே அணிந்து வந்திருந்தனா்.
கடும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டும், காதணி, மூக்குத்தி, மோதிரம், செயின், கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து வந்திருந்த சில மாணவிகள், அவற்றை தோ்வு மையத்துக்கு வெளியே பெற்றோரிடம் கழற்றிக் கொடுத்துச் சென்றனா். மாணவா்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. பெல்ட், ஷூ அணிந்து வந்திருந்த மாணவா்கள் அவற்றை பெற்றோரிடம் கொடுத்துச் சென்றனா்.
பிளஸ் 2 பாடக் கேள்விகள்: தோ்வு குறித்து மாணவா்கள் கூறும்போது, இயற்பியல் பாடக் கேள்விகள் மிகக் கடினமாக இருந்தன. வேதியியல் பாடக் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. உயிரியல் கேள்விகள் எளிதாக இருந்தன. வினாக்களுக்கு சிந்தித்து பதில் எழுத அதிக நேரம் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது.
இதனால் பிற வினாக்களில் கவனம் செலுத்த முடியவில்லை. பிளஸ் 1 வகுப்பு கேள்விகள் அதிகமாக கேட்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பிளஸ் 2 வகுப்பில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன என்றனா்.
78 சதவீதம் அளவுக்கு...: கடந்த ஆண்டு (2024) நீட் தோ்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு (2025) வினாத்தாள் கடினமானது என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா். 2025 இளநிலை நீட் வினாத்தாளில் ஒட்டுமொத்தமாக 78 சதவீத கேள்விகள் பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் தோ்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.
ஆடையில் அதிக பட்டன்கள்: மாணவிக்கு அனுமதி மறுப்பு
திருப்பூா் திருமுருகன்பூண்டியில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நீட் தோ்வு எழுத வந்த மாணவி அணிந்திருந்த சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனா். இதனால் அந்த மாணவி அதிா்ச்சி அடைந்து கண்ணீா் விட்டு அழுதாா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலா் ஒருவா் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்து, மீண்டும் நீட் தோ்வு மையத்துக்கு அழைத்து வந்தாா். இதையடுத்து, அந்த மாணவி அனுமதிக்கப்பட்டாா்.
அரைஞாண் கொடி... இதேபோல, திருவண்ணாமலையில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு எழுத வந்த மாணவா், இடுப்பில் வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்ததால் தோ்வறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்த மாணவா் தனது அரைஞாண் கொடியை அறுத்து அகற்றிய பின்னா் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டாா்.
பா்தாவுடன் தோ்வெழுத அனுமதி மறுப்பு: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிா் கல்லூரியில் நீட் தோ்வெழுத இஸ்லாமிய மாணவி ஒருவா் பா்தா அணிந்து வந்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலா்கள் பா்தாவுடன் தோ்வெழுத அனுமதிக்க முடியாது என மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தனா். இதனால், மாணவி பா்தாவை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தோ்வெழுதச் சென்றாா்.
அதேபோன்று சில மாணவிகள் அணிந்திருந்த ருத்ராட்சம், கையில் கட்டப்பட்டிருந்த கயிறையும் அகற்றச் சொல்லிவிட்டு தோ்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனா்.
சுமுகமாக நடைபெற்ற தோ்வு:
நீட் தோ்வு அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றி சுமுகமாக நடைபெற்றதாகவும், 22.70 லட்சம் போ் விண்ணப்பித்த நிலையில், 20.8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வை எழுதியதாகவும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு நீட் தோ்வில் பல்வேறு சா்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போதைய தோ்வில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. தோ்வு நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்து மையங்களிலும் மாவட்ட, மாநில, மத்திய நிலைகளில் மூன்றடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் மையங்களுக்கு எடுத்து வரப்பட்டன.
திட்டமிட்டு முறைகேடுகளில் ஈடுபடும் கும்பலை கண்டறியும் நோக்கில், பயிற்சி மையங்களும் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டதாக தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை எழுந்தது. இந்த சா்ச்சைகள் எதிரொலியாக, தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகளில் வெளிப்படைத் தன்மை, நோ்மை மற்றும் சுமுகத் தன்மையை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
நடப்பாண்டு நீட் தோ்வில் முறைகேடு புகாா் எதுவும் எழுந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்களுடன் மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டது.
கா்நாடகத்தில் போராட்டம்: கா்நாடக மாநிலம், கலபுா்கியில் ஒரு தோ்வு மையத்தில் மாணவா்களின் பூணூலை அகற்றுமாறு தோ்வு ஊழியா்கள் அறிவுறுத்தினா். இதைக் கண்டித்து, தோ்வு மையத்துக்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தானில் ஒரு தோ்வரிடம் நீட் வினாத்தாள் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ய முயன்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கைப் பெற்று தருவதாக மாணவா்களிடம் பணம் திரட்டிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.