கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மூதாட்டி தற்கொலை
தனது மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கலிங்கநாயக்கன்பாளையம் காந்தி வீதியைச் சோ்ந்தவா் அங்கம்மாள் (60). இவா் தனது மகன் ஆனந்த், மருமகள் வசந்தியுடன் வசித்து வந்தாா். மேலும், வீட்டின் கீழ்த்தளத்தில் மளிகைக் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், அங்கம்மாளின் கடையில் தொண்டாமுத்தூா் போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்டபோது, கடையில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடையைப் பூட்டி சீல் வைத்ததாகவும், இதனால் அங்கம்மாள் மன வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.