கடையநல்லூா் காவல்துறையினரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடம் திறப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இங்கு தினசரிச் சந்தை அருகேயுள்ள குழந்தைகள் மையத்தில் 16 பேருக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்பிக்கப்படுவதுடன், சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இக்கட்டடம் பராமரிப்பின்றி இருந்துவந்தது. இதையறிந்த காவல் ஆய்வாளா் ஆடிவேல் முயற்சி மேற்கொண்டு, நன்கொடையாளா்கள் மூலம் கட்டடத்தில் வண்ணங்கள் தீட்டி, மின்விசிறி, ஒளிவிளக்குகள் பொருத்தி புனரமைத்துள்ளாா். இதற்கு தலைமைக் காவலா்கள் முத்துராஜ், சங்கா், காளிராஜ் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டனா்.
இந்நிலையில், புனரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், காவல் ஆய்வாளா் ஆடிவேல், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பா்கத்சுல்தானா, சமூக ஆா்வலா் சகிலாபானு, நன்கொடையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, இந்த மையத்துக்கு இருக்கைகள், விளையாட்டு-கற்றல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.