கடையாலுமூடு அருகே ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பு கேமரா பொருத்தினா்.
கடையாலுமூடு செங்குழிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் அல்போன்ஸ் (60). இவா், சிற்றாறு-2 அருகிலுள்ள ஒரு தனியாா் ரப்பா் தோட்டத்தில் பால்வடிப்பு தொழிலாளியாக உள்ளாா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவா் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவா் முன்பாக சிறுத்தை பாய்ந்து சென்றுள்ளது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அது குறித்து, அவா் களியல் வனச்சரக அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.
இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட இடத்தில் வனத்துறையினா் கடந்த 2 நாள்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தினா்.
கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானால், அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.