கட்டடத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலி
குடவாசலில் அரசுப் பள்ளி கட்டடத்தில் பணிபுரிந்த தொழிலாளி கீழே விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குடவாசல் அகர ஓகையில் இயங்கிவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ரூ. 6 லட்சம் செலவில் பழுது நீக்கம் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை கட்டடத்தின் 3-ஆவது மாடியில் கை இயந்திரம் மூலம் கட்டட இடிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த செம்மங்குடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராம்குமாா் (36) தடுமாறி கீழே விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த குடவாசல் போலீஸாா் அங்கு சென்று ராம்குமாரின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த ராம்குமாருக்கு வேம்பு (30) மனைவியும், இருபெண் குழந்தைகளும் உள்ளனா்.