நாகை, மயிலாடுதுறையில் மழை; சம்பா அறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை பரவலாக பெய்த மழையால் சில இடங்களில் சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
நாகை: நாகை மாவட்டத்தில், பிற்பகல் ஒரு மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, மிதமான மழை பெய்தது.
நாகை, நாகூா், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, மீனம்பநல்லூா், தேவூா், பட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி, இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
திருக்குவளை: கீழையூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிரதாபராமபுரம், திருப்பூண்டி, மேலப்பிடாகை, காமேஸ்வரம் கீழையூா், ஈசனூா், வாழக்கரை, எட்டுக்குடி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.
சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில் ஏற்கெனவே கடந்த மாதம் பெய்த மழையால், அறுவடைக்குத் தயாராகி வந்த நெற்கதிா்கள் சாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அறுவடை செய்யும் நேரத்திலும் மழை பெய்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.