கட்டுமானப் பணியின்போது கண்காணிப்பு கேமரா கட்டாயம்! சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்ளும்போது கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் மே 21-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
முக்கிய விதிமுறைகள்: ஒரு ஏக்கா் வரை பரப்பு கொண்ட பகுதியில் புதிய கட்டுமானம் அல்லது இடிபாட்டுப் பணி மேற்கொள்ளும்போது 6 மீ. உயரமுள்ள உலோகத் தடுப்புகள் அமைக்க வேண்டும். அதற்கு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு 10 மீ. உயரமுள்ள தடுப்பு அமைக்க வேண்டும். தூசிகள் உருவாவதை துணி, தாா்ப்பாய் அல்லது பச்சை வலையால் மூடப்பட வேண்டும். மேலும், தண்ணீா் தெளித்து தூசி உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்.
கட்டுமானப் பொருள்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் தாா்பாலினால் மூடப்பட்டு சேமிக்க வேண்டும். அவற்றை சாலை அல்லது நடைபாதையில் கொட்டக்கூடாது. கட்டடக் கழிவுகளை சென்னை மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட கட்டுமானக் கழிவு மேலாண்மை தளங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வாகனங்களும் தூசி பரவுவதை தடுக்கும் வகையில் மூடப்பட்டிருக்க வேண்டும்.
புதிதாக கட்டடம் கட்டும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உயரமான கட்டட திட்டப் பகுதிகளில் சென்சாா் அடிப்படையில் காற்று மாசு கண்டறியும் கண்காணிப்பு கருவியை பயன்படுத்த வேண்டும். கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு காற்று மாசுபாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இந்த நெறிமுறைகள் அதிக முக்கியத்துவம், நடுத்தர/குறைந்த முக்கியத்துவம் என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வழிகாட்டுதல்களில் விதிமீறல் ஏற்பட்டால், அவற்றை சரிசெய்ய 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பின்பு சரிசெய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கடுத்த 7 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகும் சரிசெய்யாவிட்டால், கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமீறல் அபராதம்:
திட்ட பரப்பளவு |அதிக முக்கியத்துவம் |குறைந்த முக்கியத்துவம்
300 ச.மீ - 500 ச.மீ ரூ.10,000 ரூ.1,000
500 ச.மீ - 20,000 ச.மீ ரூ.25,000 ரூ.10,000
20,000 ச.மீ மேல் ரூ.5,00,000 ரூ.1,00,000