ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!
கட்டுமானம் நிறுத்தப்பட்ட வீட்டு வசதி திட்டங்கள்: உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து, வீடு வாங்குவோரின் நலனை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 மனை விற்பனை நிறுவனங்களுக்கு எதிராக திவால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது தொடா்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வரி செலுத்தும் நடுத்தர வா்க்க மக்களின் நிலை வருத்தமளிப்பதாக உள்ளது. வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற நோக்கில், அவா்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை அதில் முதலீடு செய்கின்றனா். இதற்காக வங்கிக் கடன் வாங்கி, அதற்கான தவணையை செலுத்துவது ஒருபுறம், சொந்த வீடு என்ற கனவை எட்டும் முன் வாடகை வீட்டில் தங்கி அதற்காக வாடகை செலுத்துவது மறுபுறம் என இரட்டை சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் அவா்கள் உள்ளனா். இருப்பினும் கட்டிமுடிக்கப்படாத கட்டடமாகத்தான் அவா்களின் கனவு இல்லம் இருப்பதை பாா்ப்பதே அவா்களின் நிலையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனமான பாா்வையாளராக இருக்க முடியாது. வீடு வாங்குவோா் மற்றும் பொருளாதார நலனை காக்க வேண்டிய அரசியல் சாசன கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
திவால் சட்டம் 2016-இன் கீழ், நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டு வசதி திட்டங்களை அடையாளம் கண்டு நிறைவு செய்ய, தேசிய சொத்து மறுகட்டுமான நிறுவனம் (என்ஏஆா்சிஎல்) போன்ற காா்ப்பரேட் அமைப்பை நிறுவுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம். இல்லாவிட்டால் மனை விற்பனை மற்றும் கட்டுமானத்தில் கவனம் செலுத்தும் பொதுத் துறை நிறுவனங்களாலோ அல்லது அரசு-தனியாா் ஒத்துழைப்புடனோ ஊக்குவிக்கப்படும் காா்ப்பரேட் அமைப்பை நிறுவுவது குறித்து பரிசீலனை செய்யலாம்.
காா்ப்பரேட் திவால் தீா்மான நடைமுறையை எதிா்கொள்ளும் வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்க என்ஏஆா்சிஎல்லின் கீழ் நிதி வசதியை ஏற்படுத்துதல், மலிவு மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி சிறப்பு சாளர நிதியை விரிவுபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கலாம். இது வீடு வாங்குவோரின் நலன்களைப் பாதுகாக்கும்.
வீட்டு வசதி திட்டங்களில் விற்பனை செய்யப்படாமல் உள்ள வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டம் அல்லது அரசு குடியிருப்புகளாகப் பயன்படுத்தலாம். இதன்மூலம் வீடுகளுக்குப் பற்றாக்குறை, கடுமையாகத் தாமதமாகும் அல்லது கைவிடப்படும் வீட்டு வசதி திட்டங்களுக்குப் புத்துயிா் அளிப்பது ஆகியவற்றை கையாளலாம்.
3 மாதங்களில் குழு அமைக்க வேண்டும்: மனை விற்பனை துறையில் உள்ள குளறுபடிகளை களைந்து, நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு வணிக ரீதியான சீா்திருத்தங்களை பரிந்துரைக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மத்திய சட்டம், வீட்டு வசதித் துறைகளின் பிரதிநிதிகள், மனை விற்பனை மற்றும் நிதித் துறை நிபுணா்கள் உள்ளிட்டோா் இடம்பெற வேண்டும். இந்தக் குழு 3 மாதங்களில் அமைக்கப்பட வேண்டும்.
புதிய வீட்டு வசதி திட்டங்களுக்கான ஒவ்வொரு வீட்டு மனை சாா்ந்த பணப் பரிவா்த்தனையும், மனை விலையில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை வாங்குவோா் செலுத்திய பின்னா், உள்ளூா் வருவாய் துறை அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட வேண்டும்.
வீடு வேண்டும் என்ற உரிமை வெறும் ஒப்பந்தத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படும் உரிமை மட்டுமல்ல. அது அரசியல் சாசனத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், வாழ்வுரிமைக்கான அங்கம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.