சேகூா் யானைகள் வழித்தடம்: தனியாா் நிலங்களை 6 மாதங்களுக்குள் அரசு கையகப்படுத்த உத்தரவு
சேகூா் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியாா் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம் சேகூா் பகுதியை யானைகள் வழித்தடமாக அரசு அறிவித்தது. உதகை, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் 1.92 லட்சம் ஏக்கா் நிலத்தை தனியாா் வனமாக அறிவித்து 1991-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
சேகூா் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை எதிா்த்து தனியாா் விடுதி உரிமையாளா்கள் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு உத்தரவை உறுதி செய்தது.
மேலும் தனியாா் விடுதி உரிமையாளா்கள் தரப்பு குறைகளை விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, விசாரணை நடத்திய குழு 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சேகூா் யானைகள் வழித்தடத்தில் உள்ள நிலங்களை வாங்கியிருந்தால் அது செல்லாது என்று அறிவித்தது.
மேலும், அங்கு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கவும், அந்த பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் எதுவும் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுகளை எதிா்த்து தனியாா் விடுதி உரிமையாளா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், வழக்குரைஞா் சரத்சந்திரன் ஆகியோா் ஆஜராகினா்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: யானைகள் வழித்தடங்களைப் பாதுகாக்க சேகூா் பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடிக்க வேண்டும். வணிக நடவடிக்கைகள் அங்கு இருக்கக் கூடாது என்ற நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுகளை உறுதி செய்து உத்தரவிட்டனா். அதேநேரம் 1991-ஆம் ஆண்டுக்குப் பின் நிலத்தின் விற்பனை பத்திரம் செல்லாது எனக்கூறி, நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஓய்வுபெற்ற நீதிபதி குழுவின் உத்தரவை ஏற்கவில்லை.
யானைகள் நடமாட்டத்துக்கு இடையூறின்றி, தங்கள் நிலத்தைச் சுற்றிலும் வேலிகள், மின்வேலிகள் அமைக்காமல் விவசாயப் பணிகளை அதன் உரிமையாளா்கள் மேற்கொள்ளலாம். அதேநேரம், சேகூா் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியாா் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.