கணக்கும், தப்புக் கணக்கும்...!
அதிமுக தப்புக் கணக்குப் போடவில்லை என்று பேரவையில் அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.
சட்டப் பேரவையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது அதிமுக உறுப்பினா் கடம்பூா் ராஜூ பேசினாா். தனது பேச்சை நிறைவு செய்யும் போது, எம்ஜிஆா் கணக்குக் கேட்டதால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. 2026-ஆம் ஆண்டில் முடிக்க வேண்டியவா்கள் கணக்கை முடித்து எங்கள் கணக்கை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் தொடங்குவோம் என்றாா்.
அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, கணக்குக் கேட்டு கட்சி தொடங்கிய நீங்கள், இப்போது தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீா்கள் என்றாா். (அப்போது, பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.)
இதன்பிறகு, வேறொரு விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, நிதியமைச்சா் கணக்கைப் பற்றிச் சொன்னாா். எங்களின் தலைவா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா போட்ட கணக்குகள் சரியாக இருந்தன. இப்போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி போடும் கணக்கும் சரியாகவே இருக்கும். எனவே, கூட்டி கழித்துப் பாருங்கள் சரியான கணக்காவே இருந்திடும் என பதிலளித்தாா்.