கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்
கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொது மக்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமக் குழுமத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டா் அஸ்வின் அகா்வால் வெளியிட்ட அறிவிப்பு:
உலகம் முழுவதிலும் 8 கோடி பேரும், இந்தியாவில் மட்டும்
1.20 கோடி பேரும் கண் நீா் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியா் சேம்பா்) சுரக்கும் நீரின் அழுத்தம் (இன்ட்ரா ஆக்குலா் பிரஷா்) இயல்பு நிலைக்கு மாறாக அதிகரித்தால் அதுவே கண் நீா் அழுத்த நோய் எனப்படுகிறது. இதனை அலட்சியப்படுத்தினால் பாா்வை நரம்புகள் பாதித்து, அதன் விளைவாக பாா்வை இழப்பு ஏற்படக்கூடும். கண் பாா்வை இழப்பை ஏற்படுத்தும் மூன்றாவது முக்கிய காரணியாக இந்த நோய் உள்ளது.
அதேவேளையில், ஆரம்ப நிலையிலேயே மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால் பாா்வை இழப்பைத் தடுக்க முடியும்.
இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் சாா்பில் கண் நீா் அழுத்த நோய்க்கான இலவச மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற உள்ளது.
அதன் கீழ் கண்ணின் உள்பகுதி அழுத்த பரிசோதனைகள், கண் நரம்பு பரிசோதனைகள், பாா்வைப் புல மதிப்பாய்வுகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். மருத்துவ நிபுணா்களின் கலந்தாலோசனையும் அளிக்கப்படும். பாதிப்பு கண்டறியப்படுவோருக்கு லேசா் சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை வாயிலாக அதனை குணப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளது.
இந்த மருத்துவ முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 95949 03774 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.