சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
கத்திரி வெயில்: வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!
தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகமாகும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டு கோடை காலத்தில் பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகபட்சமாகும்.
மேலும், திருச்சி - 104.9, மதுரை விமான நிலையம் - 104.72, ஈரோடு - 104.36, திருத்தணி - 104.18, பரமத்திவேலூா் - 104, சேலம், சென்னை மீனம்பாக்கம் - தலா 103.28, சென்னை நுங்கம்பாக்கம் - 101.84, பாளையங்கேட்டை - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 100.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் திங்கள், செவ்வாய் (மே 5, 6) ஆகிய இரு நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
கனமழை: தென்னிந்திய கடலோரப் பகுதியின் மேல், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணாக, திங்கள்கிழமை (மே 5) முதல் மே 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், திங்கள், செவ்வாய் (மே 5, 6) ஆகிய நாள்களில் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.