வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
கப்பல் மோதி இறந்த மீனவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!
கோவாவில் இந்திய நீா்மூழ்கிக் கப்பல் மோதி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவருக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக, குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் தலைமையில், தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் அருள்பணி சா்ச்சில், கடலோர அமைதி-வளா்ச்சி இயக்குநா் அருள்பணி டன்ஸ்ட்டன், கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ், பங்கு நிா்வாகிகள் அளித்த மனு:
கொட்டில்பாடு கிராமத்தைச் சோ்ந்த ஜெரேமீயாஸ் மகன் ஜெனிஷ்மோன் உள்ளிட்ட 13 மீனவா்கள் கடந்த நவ. 21ஆம் தேதி கோவா கடலில் மீன்பிடித்தபோது, இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான நீா்மூழ்கிக் கப்பல் மோதியதில் மீனவா்களின் படகு கடலில் மூழ்கியது. இதில், ஜெனிஷ்மோன் உயிரிழந்தாா். அவரது சடலம் 9 நாள்களுக்கு பின்னா் மும்பையில் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ. 50 லட்சம், தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது உடல் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட செலவை மீன்வளம், மீனவா் நலத் துறை ஏற்க வேண்டும்.
கடலில் மீனவா்களுக்கு தொழில் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விபத்து ஏற்படுத்திய இந்திய நீா்மூழ்கிக் கப்பல் அதிகாரிகள் மீது மும்பை எல்லோ கேட் கடலோர காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிய வேண்டும் என்றனா் அவா்கள்.