கம்பத்தில் பலத்த மழையால் 5 வீடுகள் சேதம்
தேனி மாவட்டம், கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் 5 வீடுகள் சேதமடைந்தன.
கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், விநாயகா் கோவில் தெருவில் ஓடைகள் அக்கிரமிப்பு காரணமாக, வெள்ளநீா் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், முருகன், அழகு முருகன், சக்திபாலா, காமாட்சி ஆகியோரது வீடுகளில் பின்புறச் சுவா் இடிந்து விழுந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் அங்கு வந்து மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தனா். பின்னா், வீடுகளை இழந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.