கரூரில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் ஆா்ப்பாட்டம்
கரூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் புதன்கிழமை (பிப்.5)ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் கோவைச் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் மா. பால்ராஜ் தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சங்க மாநிலச் செயலா் க. தனபால், மின் வாரிய பொறியாளா் சங்க மாவட்டச் செயலாளா் மா. முருகன், ஐக்கிய சங்க மாவட்டச் செயலாளா் ஆா். சுபாஷ் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
சண்டீகா், உத்தரப் பிரதேசம் மாநில மின் வாரியங்களை தனியாா் மயமாக்கும் முடிவை கண்டித்தும், இரு மாநிலங்களும் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், அந்த மாநிலங்களின் மின் வாரிய ஊழியா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மின் ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.