கரூர்: "ரசிகர்களின் செயல்பாடே காரணம்" - CPI(M) தலைவர் பெ.சண்முகம் வேதனை!
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்னும் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளதால், கரூர் தலைமை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையிலும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு செயலாளர் பெ.சண்முகம், "எந்த கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தொலைக்காட்சி செய்தியின் புகைப்படத்தை வெளியிட்ட அவர், "இன்று கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏராளமானோர் குழந்தைகள் என்பது மிகப்பெரிய சோகம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. "எந்த கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும். பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.