கரூர்: ``வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்'' - விஜய் செல்வதென்ன?
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தநிலையில் கரூரில் நடந்த சம்பவத்தால் இதயம் நொறுங்கிப் போய் இருப்பதாக தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்.

அவரது சமூக வலைத்தளப்பதிவில், "இதயம் நொறுங்கிப் போயிருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்தது என்ன?
விஜய் கரூரில் இன்று பரப்புரை மேற்கொண்டார். வேலுசாமிபுரத்துக்கு தாமதமாக வந்த அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது வாகனத்தின் அருகே தொண்டர்கள் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்தனர். விஜய்யே பேச்சை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, ஆம்புலன்ஸையும் அழைத்து உதவினார்.

மக்கள் கூட்ட நெரிசலில் தவிக்க, விரைந்து பேச்சை முடித்துவிட்டு, பேப்பரில் இருந்ததை வேக வேகமாக வாசித்துவிட்டு தனது பிரசார பேச்சை முடித்துக்கொண்டார்.
விஜய் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மயங்கியவர்களை மீட்டுச் செல்ல கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்ததால் கூட்டத்தின் நடுவே தள்ளுமுள்ளும் ஏற்பட்டிருக்கிறது.
இதனால், பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிலர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.