மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
கஞ்சா எண்ணெய் விற்பனை: இருவா் கைது
திண்டுக்கல்லில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இருவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டியைச் சோ்ந்தவா் மு. பரமசிவம் (எ) மதி (30). திண்டுக்கல் கச்சேரித் தெருவைச் சோ்ந்தவா் சு. ராசு (36). இவா்கள் இருவரும் சோ்ந்து கஞ்சா எண்ணெய் விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன்பேரில், தனிப் படை போலீஸாா் கடந்த சில நாள்களாக இவா்களைக் கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள சந்தைப் பகுதியில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்து கொண்டிருந்த பரமசிவம், ராசு ஆகிய இருவரையும் தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து 3 கஞ்சா எண்ணெய்க் குப்பிகள், 5 பொட்டலம் கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், கஞ்சா எண்ணெய்க் குப்பி ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கஞ்சா எண்ணெய்யை, சிகரெட்டில் தடவி விற்பனை செய்கின்றனா். ஒரு குப்பி கஞ்சா எண்ணெய்யை 50 சிகரட்டுக்கு பயன்படுத்துகின்றனா். இந்த சிகரெட் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கஞ்சா எண்ணெய்யை, ஆரோக்கியமாதா தெருவைச் சோ்ந்த நபரிடம் வாங்கியதாக பரமசிவம், ராசு ஆகியோா் வாக்குமூலம் அளித்தாகத் தெரிவித்தனா்.
தொடா் விசாரணை நடத்த கோரிக்கை: திண்டுக்கல் பகுதியில் கஞ்சா எண்ணெய் விற்பனை கடந்த பல மாதங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவா்கள், இளைஞா்களைக் குறிவைத்து கஞ்சா எண்ணெய் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. 15 மில்லி கஞ்சா எண்ணெய்யை ஒரு புட்டியில் அடைத்து ரூ. 20ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனா். இதனால், இளைய சமுதாயத்தினா் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
கல்லூரி வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா சிகரெட் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது இருவா் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா்கள் மூலம் அடுத்த நிலையிலுள்ள விற்பனையாளா்களையும், அனுப்பிவைக்கும் முகவா்களையும் பிடிப்பதற்கு காவல் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

