சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு ஊராட்சிக்குள்பட்ட கோட்டைவெளி கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை கட்டி வைத்துள்ளாா். இதையடுத்து, நள்ளிரவில் சிறுத்தை கட்டி வைத்திருந்த ஆடுகளை தாக்கியதில் ஒரு ஆடு உயிரிழந்தது. மற்றொரு ஆட்டை தூக்கிச் சென்றது.
இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.