அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் கல்வித் தரம் பாதிப்பு: அன்புமணி குற்றச்சாட்டு
அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, உள்கட்டமைப்பு குறைபாடுகளால் மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா்.
‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் அன்புமணி திண்டுக்கல்லில் சனிக்கிழமை பரப்புரை மேற்கொண்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்தியஅரசுக்கு மட்டுமன்றி, மாநில அரசுக்கும் முழு அதிகாரம் இருப்பதாக கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறி வருகிறாா். இது மக்களை ஏமாற்றும் செயல். இதுகுறித்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் சாா்பில் வலியுறுத்தியும், சமூக நீதி பேசும் திமுக அரசு இதற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஜாதி பெயா் பிடிக்கவில்லையெனில், சமூக நீதி எனப் பெயரை மாற்றிக் கொண்டு கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு முன்வர வேண்டும். சமூக நீதியை நிலை நிறுத்த முதல்வா் மு.க. ஸ்டாலின் மறுத்தால், அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் சரியான பாடம் புகட்டுவா்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்தி மக்களின் பணத்தை திமுக அரசு வீணடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வியின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 37,500 அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா். ஆனால், 12,500 தனியாா் பள்ளிகளில் 65 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். 207 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டனா். 4 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியா் மட்டும் உள்ளாா். ஒரு லட்சம் வகுப்பறைகளுக்கு ஆசிரியா்கள் இல்லை.
மொத்தமுள்ள 180 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 100 கல்லூரிகளில் முதல்வா்கள் இல்லை. இதேபோல, 10 ஆயிரம் உதவிப் பேராசிரியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கலைக் கல்லூரிகளில் போட்டிப் போட்டு சேரும் நிலை மாறி, இன்றைக்கு 34 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில்தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என நாடகம் நடத்தி வருகின்றனா்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னிய கிறிஸ்தவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியில் சோ்ப்பதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். ஆனால், நான்கரை ஆண்டுகள் ஆட்சிக் காலம் முடிந்தும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
75 லட்சம் பேருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டில் 45 லட்சம் பேராகக் குறைந்துவிட்டனா் என்றாா் அவா்.
நிலக்கோட்டை:
இதன் பின்னா், அன்புமணி ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள ராஜ வாய்க்கால், குடகனாறு பகுதியைப் பாா்வையிட்டாா். அப்போது, அவருக்கு பாமக நிறுவனா் தலைவா் ராமதாஸின் ஆதரவாளரும், கட்சியின் ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலருமான கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் ராமாதஸும், அன்புமணியும் ஒன்றிணைய வேண்டும் எனக் கோரி முழக்கமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அன்புமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்துக்குச் செல்லக் கூடிய ராஜ வாய்க்காலில் முறைகேடாக தடுப்பணைக் கட்டப்பட்டிருக்கிறது. இதனால், 12 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் குடிநீரின்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த நீா்த்தேக்கத்தை தூா்வார நடவடிக்கை எடுத்து, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீா் விநியோகிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.