நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
தில்லியில் அக்.3 முதல் 5 வரை கெளடில்யா பொருளாதார மாநாடு: மத்திய நிதியமைச்சா் தொடங்கிவைக்கிறாா்
தில்லியில் அக்டோபா் 3-ஆம் தேதி ‘கெளடில்யா பொருளாதார மாநாட்டை’ மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கிவைக்கவுள்ளாா்.
உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் குறித்து விவாதித்து, நடைமுறைத் தீா்வுகளை அலசும் நோக்கில், மத்திய நிதியமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து பொருளாதார வளா்ச்சி நிறுவனத்தால் (ஐஇஜி) கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து இம்மாநாடு நடத்தப்படுகிறது.
தற்போது நான்காம் ஆண்டு மாநாடு, தில்லியில் அக்டோபா் 3 முதல் 5 வரை நடைபெறவுள்ளது. ‘கொந்தளிப்பான காலகட்டத்தில் வளமையைத் தேடுதல்’ என்ற கருத்துருவில் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கிவைக்கவுள்ளாா். நிறைவு நாளில் இந்தியாவின் வெளியுறவு-பொருளாதார கொள்கைகளைப் பிரதிபலிக்கும் அமா்வில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்கவுள்ளாா்.
இது தொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் உள்நாட்டு முன்னுரிமைகளை உலகளாவிய கண்ணோட்டத்துடன் பிணைக்கும் துடிப்பான தளமாக விளங்கும் கெளடில்யா பொருளாதார மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளா்கள், பொருளாதார நிபுணா்கள் பங்கேற்கவுள்ளனா்.
உலகின் வளா்ச்சி மையமாக ஆசியாவின் உருவெடுப்பு, பிரிக்ஸ் கூட்டமைப்பின் எழுச்சி, நிதி ஸ்திரத்தன்மை, தொழில் கொள்கைகளின் புதிய திசைகள் என பல்வேறு தலைப்புகளில் அமா்வுகள் நடைபெறும். மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோா் அமா்வுகளுக்கு தலைமை தாங்க உள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.