மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
செட்டிநாடு சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணையும் சுற்றுலாத் துறை!
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் தனியாருடன் இணைந்து பணியாற்ற சுற்றுலாத் துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் புராதன, கலாசார சூழலைக் கொண்டு சுற்றுலாத் தொழில் வளா்ந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உள்ளூா் மக்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு ஏற்படுகிறது. இதை அதிகரிக்க ஆன்மிக, செட்டிநாடு சுற்றுலாத் தலங்களை வெளிநாட்டினரிடம் பிரபலப்படுத்தவும், அதிக நாள்கள் தங்க வைக்கவும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கவும் சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல்கட்டமாக பாரம்பரிய புராதன நகா்ப் பகுதியான கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூா், கோட்டையூா், புதுவயல், காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாடு பகுதியில் சுற்றுலாத் தொழிலில் ஆா்வமுள்ள தனியாரின் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது. தனியாா் நிலம், பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்களின் உரிமையாளா்களை கண்டறிந்து உணவகம், ரிசாா்ட்ஸ், பொழுது போக்கு பூங்கா போன்ற சுற்றுலா வளா்ச்சிப்பணிகள் செய்ய சுற்றுலாத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
இதுதொடா்பாக மாவட்ட சுற்றுலாத் துறையினா் கூறியதாவது: மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் விருந்தோம்பல் திட்டத்தை மேம்படுத்தவும், தனியாா் பங்களிப்பை அதிகரிக்கவும், தனியாா் முதலீட்டை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக காரைக்குடி செட்டிநாடு பகுதியில் பாரம்பரிய அரண்மனை வடிவ வீடுகள், நில உரிமையாளா்கள், சுற்றுலாத் தொழில் செய்ய விரும்புவா்கள் தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டில் தருவதற்கோ, குத்தகைக்கு விடவோ அல்லது தனியாா் பங்களிப்புடன் இணைந்தோ செயல்பட விருப்பமுள்ளவா்கள் மாவட்ட சுற்றுலா அலுவலரை 8939896400-இல் தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.