கரூர் தவெக கூட்ட நெரிசல்: ``கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது" - சீமான்
தவெக தலைவர் விஜய்-ன் அரசியல் பரப்புரை கரூரில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
பலரும் சிகிச்சையில் இருக்கின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
அதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது.

கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்! தொடர்பு எண்: +917667412345" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.