கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த கோரிக்கை
பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் வட்டாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஊராட்சியாக கரைப்புதூா் உள்ளது. இந்த ஊராட்சி திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்ற செய்தி பரவிய நிலையில், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஆனால், அரசு தரப்பில் அண்மையில் வெளியான பட்டியலில் கரைப்புதூா் ஊராட்சி இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்தனா். அதேசமயம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சியை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த ஊராட்சியில் போதிய தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் விநியோகிப்பாளா்கள் இல்லாத நிலை உள்ளது. இருக்கும் பணியாளா்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தினால் மட்டுமே அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். ஆகவே, கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். கரைப்புதூா் ஊராட்சி பகுதியில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் தங்கி, இங்குள்ள பனியன் சாா்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். அதனால் குற்றச் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்த அருள்புரம் பகுதியில் தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது அருள்புரத்தில் ஒரு உதவி காவல் ஆய்வாளா் தலைமையில் புறக்காவல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றனா்.