10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!
கலைஞரின் கனவு இல்லம்: பெரம்பலூரில் 1,398 வீடுகள் கட்ட திட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,398 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில், 120 ஊராட்சிகளில் ஊரக விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஒரு ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊரக விளையாட்டு மையத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். 2024-25 ஆம் ஆண்டில் புதிய குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பெரம்பலூா் ஒன்றியத்தில் 37, வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 47, ஆலத்தூா் ஒன்றியத்தில் 74, வேப்பூா் ஒன்றியத்தில் 81 என மொத்தம் 239 குளங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு 143 குளங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024 -25 ஆம் நிதியாண்டில் பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகளும், ஆலத்தூா் ஒன்றியத்தில் 317 வீடுகளும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 360 வீடுகளும், வேப்பூா் ஒன்றியத்தில் 337 வீடுகளும் என மொத்தம் 1,200 வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டதில், 525 வீடுகள் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 2025 -26 ஆம் நிதியாண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 1,398 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது,
ஊரக வீடுகள் புனரமைப்புத் திட்டத்தின் மூலம், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள 714 வீடுகளும், சிறிது பாதிக்கப்பட்ட 781 வீடுகளும் புனரமைக்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 400 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேலும், பல்வேறு திட்டங்களின் மூலம் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அரசுப் பள்ளிக் கட்டடங்கள், அரசு அலுவலகக் கட்டடங்களை குறித்த காலத்தில் கட்டி முடிக்க வேண்டும். கோடை காலமாக இருப்பதால், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கிட வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்வம் உள்பட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார உதவி பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.