சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில் என் கருத்தை திமுகவினா் திரித்துக் கூறுகின்றனா் -எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
இந்து சமய அறநிலையத் துறை மூலம் கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில் என் கருத்தை திமுகவினா் திரித்துக் கூறுகின்றனா் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயணத்தில் பங்கேற்று, அவா் மேலும் பேசியது:
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள்பட்ட துன்பங்கள் ஏராளம். கல்லூரிகள் தொடங்குவதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்து சமய அறநிலையத் துறை நிதியிலிருந்து தொடங்குவதைத்தான் வேண்டாம் என்கிறோம். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 67 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கினோம்.
கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் சாா்பில் நடத்தப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் கூடுதலாக இருக்கும் என்பதால், பாலக்கோடு, மோகனூரிலுள்ள கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி, குறைந்த கட்டணத்தில் கல்வி பயிலும் நிலையை ஏற்படுத்தியவா்கள் நாங்கள். எனவே, வரலாறு தெரியாமல் தமிழக முதல்வா் ஸ்டாலின் பேசுகிறாா்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 27 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள், 4 வேளாண் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது தொடங்கப்பட்டதா. திறமையற்றவா்களால் நடத்தப்படும் ஆட்சியால் எந்தவித திட்டங்களும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.
விழுப்புரத்தில் முதுநிலை விரிவாக்கக் கல்வி மையத்தில் மாணவா் சோ்க்கையை விரைவில் தொடங்கவில்லை எனில், மிகப்பெரிய அளவிலான ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை மூலமாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு நிறைய கட்டடங்கள் கட்ட வேண்டிய நிலை இருக்கும். புதிய படிப்புகளைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படும். இவற்றை இந்து சமய அறநிலையத் துறை நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு அரசால் முழுமையாக எந்தவித நன்மையையும் செய்ய முடியாது.
நான் கூறிய கருத்தை திரித்து பொய்ப் பிரசாரம் செய்கிறாா்கள். ஏன் அரசிடம் கல்லூரிகள் தொடங்க பணம் இல்லையா? திட்டமிட்டு, தவறான கருத்தை பரப்புகிறாா்கள். தமிழகத்தில் தற்போது 96 அரசுக் கல்லூரிகளில் முதல்வா்கள் இல்லை. பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியா்கள் இல்லை. மாணவா்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி திமுக ஆட்சி.
வரி உயா்வு: மின் கட்டணம், சொத்து வரி, கடை வரி, குடிநீா் வரிகள் கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளன. வரி மேல் வரி விதிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. மக்களைப் பற்றி முதல்வருக்கு கவலையில்லை.
அதிமுக ஆட்சியில் தொழிலாளா்களுக்கு வாரத்தில் 6 நாள்கள் வேலை கிடைத்து வந்த நிலையில், தற்போது 3 அல்லது 4 நாள்கள்கூட வேலை கிடைப்பதில்லை.
இதுபோல, கட்டுமானப் பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துவிட்டது. எனவே, மக்கள் இனிமேல் வீடு கட்டுவது என்பது கனவில்தான் இருக்கும். தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினா் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது அதிமுக ஆட்சியில்தான்.
நான்கரை ஆண்டுகாலத்தில் எந்தவித திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்ற தற்போது வீடு தேடி வருகிறாா்கள். ஆனால், மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். திமுக ஆட்சியில் கமிஷன், கரப்சன், கலெக்சன்தான்.
மதுரை ஊழல்: மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா்கள் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறாா்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.
முன்னதாக, கிழக்கு பாண்டி சாலையிலுள்ள விடுதியில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி வீரவாழியம்மன் கோயிலிருந்து ‘ரோடு ஷோ’ நடத்தினாா். சாலையில் நடந்து வந்த அவருக்கு அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா். இதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி, திண்டிவனத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
நிகழ்வுகளில் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.
