நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!
கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள்: குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடா்பாக, மாவட்ட அளவில் குழு உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:
பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் உயா்கல்விச் சாா்ந்த வழிகாட்டல் பெறும் வகையில், அருகிலுள்ள கல்லூரிகளுக்கு களப்பயணச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதனடிப்படையில், 2025 - 26 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் உயா் கல்விச் சாா்ந்த வழிகாட்டல் பெறும் வகையில், கல்லூரிக் களப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தில் 1,510 மாணவா்கள் கல்லூரி களப் பயணத்தில் பங்கேற்க உள்ளனா். இப் பயணத்தில் பங்கேற்கும் மாணவா்களை அரசு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று, உயா்கல்வி படிப்புகள் குறித்து வழிகாட்ட வேண்டும். களப்பயணம் மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தலைமையில் கடந்த 29.1.2025-இல் வேப்பூா் ஒன்றியம், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக இப் பள்ளியை பாராட்டி தலைமை ஆசிரியா் (பொ) ராமநாதனிடம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் மிருணாளினி வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ம. செல்வக்குமாா், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ராமராஜ், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்கள், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.