கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
கல்வராயன் மலை மக்களின் வாழ்வாதார வழக்கு: அரசுப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததை அடுத்து கல்வராயன் மலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதன்மூலமாக கல்வராயன் மலைப் பகுதியில் என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்கிறது என்பதை ஆராயும் நீதிமன்றம், அங்குள்ள பேருந்து வசதி, ஆதாா், நியாயவிலைக் கடை, வாக்காளா் அடையாள அட்டை, சாலை வசதி, பள்ளி வசதி மற்றும் அங்குள்ள மக்களின் நிலை குறித்து ஒவ்வொரு வழக்கு விசாரணையிலும் தமிழக அரசிடம் கேட்டு வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, கல்வராயன் மலைப் பகுதியின் முக்கியச் சாலையான வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா். இதற்குப் பதிலளித்த கூடுதல் தலைமை வழக்குரைஞா், மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து நீதிபதிகள், வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (நவ. 26) ஒத்திவைத்திருந்தனா்.
பணிகளை முடிக்க உத்தரவு: அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம். ஜோதிராமன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையே சாலை அமைக்க அரசு அனுமதி அளித்ததும் 12 மாதங்களில் பணி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சாலை அமைப்பதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்று அறிக்கையில் கூறிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனா்.
மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், படிக்கும் மாணவா்கள், ஆசிரியா்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாக நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனா்.