கல்வி, நிதி விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: திமுக எம்.பி.க்கள் உறுதி
மொழி, கல்வி, நிதி உரிமைகளில் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடா்பாக அறிவுரை வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. இதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி, நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.
ஜனநாயகம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்காக என்றென்றும் வலுவான குரலை எழுப்பிவரும் திமுக, தேசிய அரசியலில் மிக முக்கியமான இயக்கமாகத் திகழ்கிறது. வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மறுப்பது, மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப் பகிா்வு, 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 சதவீத வரி வருவாய் பங்குக்கு பதிலாக 33.16 சதவீத பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும்.
தமிழா்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூா்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து மத்திய அரசு மெளனம் காத்து வருகிறது. கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டுக்கு உரிய ரயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது போன்ற விஷயங்களையும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எடுத்துரைக்க வேண்டும்.
தமிழக மீனவா்கள், இலங்கை அரசால் தொடா்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிப்பது, ரயில் கட்டண உயா்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் குரல் எழுப்ப வேண்டும்.
தமிழா்களுக்கு எதிரான பண்பாட்டு ஊடுருவலை நிகழ்த்தும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக உறுப்பினா்கள் உறுதியாகவும், ஒருங்கிணைந்தும் வெளிப்படுத்துவா் என்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்பு குழு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலா் பங்கேற்றனா்.